அதிகம் வாசித்தவை

Posted by : Unknown Saturday, March 1, 2014










அந்தகாரத்தின்
சொந்தக்காரி நான்
நந்தவனத்தில் என்னால்
நடக்க மட்டுமே முடியும்!

ஒளி என்ற சொல்லின்
ஒலியைத்தான் கேட்டதுண்டு
விழி வழியாய் ஒருநாளும்
பார்த்ததில்லை!

நிறங்களின் நாமம்தான்
நானறிவேன்
நிறங்களை நான் கண்டதில்லை!

கருப்பின் எதிர்வண்ணம்
எனக்கோ புதிர் வர்ணம்!

என் கண்களைத்தவிர
ஏனைய உறுப்புக்கள்
எப்போதும்
பார்த்துக்கொண்டே இருக்கின்றன!

தொழிலிழந்த கண்களுக்கு
கருப்புக்கண்ணாடிச் சட்டை
பார்ப்பவர் புரிந்து கொள்ள
அது விளம்பர அட்டை!

வெள்ளைப் பிரம்பொன்று
வீதியைக்கடப்பதற்கு
எந்தப்பிரம்புமில்லை
விதியைக்கடப்பதற்கு!

இருளே எனது ராஜ்ஜியம்
விழியற்ற என்
வாழ்வோ ஒரு பூஜ்யம்!

சிருஸ்டித்த கர்த்தா
சிரசுவைக்க மறந்துவிட்டார்
சிரழிந்து கிடக்கிறேன்
சிறகொடிந்த பறவை நான்!

அகவிழி திறந்துதான்
அகிலத்தைப்பார்க்கிறேன்
அகப்புலக் காட்சியால்
அதன்வழி காண்கிறேன்!

முட்களை நான்
வேண்டுமென்று
மிதிப்பதில்லை
முன்னே வரும் உங்களை
நான் தெரிந்து கொண்டும்
முட்டவில்லை!

ஒளிவாங்கு
விழி செய் பாவங்கள்
செய்யாமல் தப்பிவிட்டேன்
ஏறி நரகம் போகாது
எனை நானும் காத்து விட்டேன்!

ஈக்கள் கூட
என்னை ஏளனிப்பது
எனக்குப் புரிகிறது!

நீங்கள் கூட
என்னை இரக்கமாய்
பார்ப்பதும் தெரிகிறது!

தினமும் வழிதேடித்
தடுமாறும் என்னை
தானாகத் தொட்டு
வழிகாட்ட வந்தாய்

அதுபோல் கலியாணம்
செய்தெனக்கு
தாலிகட்ட வருவாயா?
எந்தன்
இருவிழியாய் இருப்பாயா?

உன்கண்ணால் உலகத்தை
பாத்திடுவேன்
என் எண்ணம் உனக்காக
காத்திடுவேன்!


                    -உமர் அலி முகம்மதிஸ்மாயில்

Leave a Reply

என்னுள்ளத்து கதவை மெல்ல தட்டி அழைத்த எண்ணங்களுக்கு கற்பனை சொற்கள் கொண்டு வரிகள் கொடுத்த போது...

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © நிலாத்தூறல் - Date A Live - Powered by Blogger - Designed by Johanes Djogan -