- Back to Home »
- கிராமிய கவிதை , முகம்மதிஸ்மாயில் , வாழ்க்கை கவிதை »
- திரும்பாத இளமை பருவம்
Posted by : Unknown
Tuesday, February 25, 2014
தென்னம் மட்டைவெட்டி
அதில் வண்டில் மாடு கட்டிஅண்ணனும் தம்பியும்
வீதியில் இழுத்து திரிந்துக்கிட்டு
பனை நுங்கு வெட்டி
கெண்டித்தின்ற பின்பு
ரெண்டு நுங்கிணைத்து
வண்டி ஒன்று செய்து
இடுக்கு முடுக்கெல்லாம்
கொண்டு சென்றிடுவோம்!
பழைய வளையமும்
சிதைஞ்சிபோன
டயர்களும் எங்களது
வாகனங்களாய் இருந்தன !
முடியப்பட்ட
கயிற்று பேரூந்துகளில்
செருப்பணியா கால்களுடன்
தெருக்கோடிவரை
ஓடி மகிழ்ந்திடுவோம்!
சாரதியின் கைகளிலே
பிரம்பு வளையம்
கற்பனையால் கைகளில்
வளைந்து நடனமாடும் !
ஒருவர் முன்னிழுக்க
ஒருவர் பின்னாலிழுக்க
இடைப்பட்ட சின்னவர்கள்
முன்னவரைப் பின்பற்ற
கயிற்றுப் பேரூந்து
முச்சந்தி கடந்து செல்லும்!
பீப் பீப்
என்ற சாரதியின் சத்தம்
பாதையிலே போவோரை
ஓரம்போகச்சொல்லும்!
வாயால் உமிழ் நீரை
உமிழ்ந்து கொண்டு
காலால்
ஊரெல்லாம் சுற்றிவரும்
கயிற்றுப் பேரூந்து!
கயிறறுந்தால்
காற்றுப்போனதாய் அர்த்தம்
கயிறிழுத்தால்
இறக்கமிருப்பதாய் கருத்து !
திடீரென
திசைமாறும் வேளை
சிலர் குப்புற விழ
தரையைத் தாக்கிய
முழங்காலின் மூக்கில்
குருதி வடியும்!
சொல்லாமல்
வண்டி திடீரென நிற்க
நடுவிலே நிற்பவர்
ஆளுக்காள் முட்ட
பின்னந்தலையும்
நுனிமூக்கும் நச்சென
முத்தமிட்டுக்கொள்ளும் !
இதுபோல
அடிச்சான் பிடிச்சி
ஒளிந்தவனை
கண்டுபிடிச்சி
கள்ளன் போலீசென்றும்
கபடி ,எல்லைஎன்றும்
துள்ளி விளையாடி
மகிழ்ந்திருக்கும் நாட்களிலே!
துவக்குச் சுடுவதும்
குண்டு வெடிப்பதும்
அட்டாக்கு பண்ணிக்
கொண்டு அடி பிடி நடத்துவதும்
படிப்படியாய் வந்து சேர்ந்தது!
வீதியிலே கண்டது
செய்தியிலே கேட்டது
டீவியிலே பார்த்தது
வாழ்வினிலே இணைந்தது!
அடியோடு மறந்தோம்
அத்தனை விளையாட்டும்
படியேறிக் கடந்தோம்!
விளையாட்டு மட்டும்
மாறல எங்கள்
மன நிலையும்
மாறியது !
பசுமை பறந்து செல்ல
பொசுக்கும் பண்புகள்
தொற்றிக் கொண்டது
மனங்கள் எரிந்து
பற்றிக்கொண்டன
கொஞ்சல்கள் எல்லாம்
குழிதோண்டிப் புதைத்து
வஞ்சம் வந்து வசதியாய்
குடியேறிப்போச்சு!
-உமர் அலி முகம்மதிஸ்மாயில்