- Back to Home »
- கிராமிய கவிதை , முகம்மதிஸ்மாயில் »
- கால்ச்சட்டை (பாதணி)
Posted by : Unknown
Saturday, March 15, 2014
கால்தேய்ஞ்சி போயி
கடைசியிலே வாங்கிவந்த
கால்ச்சட்டை நானல்லோ !
கால்நடையாய் நான் சென்று
கால்நடைபோல் மேயாத
இடமில்லை !
முள் ஏறிமிதித்து
உள்வலியைத்தாங்கும் என்னை
முதிகேறி மிதித்து
உன் வழியால் போனாயே!
கொதிக்கின்ற பாதையிலே
உன்பாதம் புண்படாமல்
கொதிதாங்கி நடந்தேனே
உனைக்காத்து நின்றேனே!
இறப்பர் கேடயம் நான்
இறந்து இறந்து மடிந்தேன்
உன் வாழ்க்கைப் போரினிலே
நாளும் மீளப் பிறந்தேன் !
மேல்சட்டை கால்சட்டை
பலவடிவில் இருந்தாலும்
கால்சட்டை நானுனக்கு
ஒரே அளவில் வேணுமடா!
நான் உனக்காக
எதிரில் வந்தவற்றில்
மதித்தவற்றை விட
மிதித்தவைகளே அதிகம் !
உழைப்பிலே உடனிருந்தேன்
ஓய்விலே தூரவைத்தாய்அன்று
மடையனுக்கு புரியவில்லை
மனிதன் உந்தன் மனநிலை!
பாவம் செய்ய
கூட்டிச்செல்வாய்
பள்ளி சென்றால்
வெளியில் வைப்பாய் !
அசிங்கம் அப்பிடாமல்
சிங்கம் உன்னை காத்துநின்றேன்
அசிங்கம் என்று சொல்லி
அங்கு மூலையிலே போட்டாயே!
பாரமற்ற என்முதுகு
பாரமுற்ற உன்னுடலை
பார்த்துத்தான் தூக்கியதா?
நேரமற்று போனாலும் ஒருநாளும்
எனை மறந்து நீ போனதில்லை
நினைவிருக்கா !
தீண்டாத பொருள் என்
துணையின்றி நீ
புனிதத்தை அடையும் வழி
தாண்டத்தான் முடிந்திடுமா?
உனக்காக உழைத்த நான்
இளைத்துப் போனேனே இதுவரை
எனக்காக எதையும் நான்
சேர்க்கவில்லை தேய்ந்ததைத்தவிர!
உன் பாரம் தந்த பரிசு
என் முகத்தில்
உன் பாதத்தின் பதிவு!
இதுகாறும் பெருமையுற்றேன்
உன்காலில் இருந்தவரை
இந்நாளில் வெறுக்கின்றேன்
உன் கை என்னை
தொட்டெறிந்ததனால்!
இருக்கும் வரை தேவைப்பட்டேன்
பட்டி அறுக்கும் வரை பாடுபட்டேன்
தோலறுந்த நிலையில்
எட்ட எறிந்தாயே உள்ளம்
சுட்டு நின்றாயே!
- உமர் அலி முகம்மதிஸ்மாயில்