அதிகம் வாசித்தவை

Posted by : Unknown Sunday, March 2, 2014











பலவீடு கட்டினாய் நீ
செங்கல் வெட்டி,
உனக்கு
குழிவீடு வெட்டுது
நான்கு
மண்வெட்டி !

யார் பேச்சையும்
கேட்காத நீ
பேச்சு மூச்சற்று
கிடக்கிறாய்
நீட்டி நிமிந்து
படுக்கிறாய்!

சுத்திச்சுழன்ற உன் விழி
குத்திட்டுப்பார்க்கிது
உயிர்போன வழி!

கொட்டும் பறையர்
கும்மாளம் போடுறார்
வீட்டில் அனைவரும்
கூடி நிற்கிறார்!

போலிக் கண்ணீரை
மாலையாய் கொட்டுறார்
கூலிக்கு சிலபேர்
மார்பிலடிகிறார்!

சொத்துப்பிரிக்கிறார்
மனக்கணக்காலே
செத்துப் பிழைக்கிறார்
மணிக்கணக்காக !

திட்டித்தீர்க்கிறார்
திறப்பினைத்தேடி
கொட்டித்தீர்க்கிறார்
குறைகளைக்கூறி!

மூலையில் சந்தணம்
கடமைக்குப் புகைகிறது
சேலையில் ஓருயிர்
கண்ணீரில் புதைகிறது!

எப்ப புதைப்பார்
எப்ப எரிப்பார்
என்ன சுணக்கம்
எனப்பல வினாக்கள்!

கொடுத்தவரெல்லாம்
எடுத்தவரானார்
கடன் கொடுத்தவர் மட்டும்
கேட்கவுமானார்!

விறைத்த கட்டைவிரல்
மையிலே குளிக்குது
குளித்தவிரல் கையினை
கடதாசி தொட்டுத் துடைக்குது!

நாலிரண்டு கால்
நடந்து போகுது
நாவரண்டு அவள்
அழுகையும் கேட்கிறது!

பிள்ளைக்கு பிரிந்தது
சொத்துதெல்லாம்
அன்னையைப் பிரிந்தது
அவள் சொத்தன்றோ?


                         -உமர் அலி முகம்மதிஸ்மாயில்

Leave a Reply

என்னுள்ளத்து கதவை மெல்ல தட்டி அழைத்த எண்ணங்களுக்கு கற்பனை சொற்கள் கொண்டு வரிகள் கொடுத்த போது...

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © நிலாத்தூறல் - Date A Live - Powered by Blogger - Designed by Johanes Djogan -