- Back to Home »
- நடப்புக்கவிதை , முகம்மதிஸ்மாயில் »
- தமிழ்
Posted by : Unknown
Sunday, March 16, 2014
நெளிவு சுளிவுடன்
தென்றல் போலொரு
இனிய சுகத்துடன்!
தமிழ் நதி தான்
பாய்ந்த இடமெல்லாம்
மண் நனைத்துச் சென்றது!
தனை
அள்ளிச்சுவைத்தவரின்
மனம் கொள்ளை கொண்டது !
"ல'கர ' ழ'கரத்தில்
அர்த்தம் திருத்தமாய்
ர"கர ற "கரத்தில்
ஒழுக்க தழுக்கமாய்
ஒருசொல் பலபொருள்
இடக்கரடக்கலும்
மருவலும் குழு உக்
குறியும் கொண்டதே !
சொற்களில் வேற்றுமையும்
புணர்ச்சியும்
தொகையும்
தொகை மயிலாக
நானிலத்தின் சிறப்பை
தன்னகத்தே
நல்ல சொல்வளத்தால்
கொண்ட செந்தமிழ் தமிழ்!
உயிரும் உடலும்
ஒன்றாகி பொருளைத்தருவதில்
கண்ணாகி தமிழும்
இன்னொரு கண்ணகி!
இருநூறும்
ஈர் இருபதும்
ஒராறும்
ஓர் ஆயுதமும்
கருவியாக்கி
மாநிலம் உழுது
மொழிப்போர் செய்து
மொழியினை விதைத்தது!
பாட்டும் தொகையும்
ஏட்டிலே கொடுத்தது
பதினென் கணக்குகள்
பாட்டிலே தந்தது
அகத்தியம் அகத்திலே
கொண்டு ,தொல்
காப்பியம் அடிப்படை இலக்கணம்
கண்டது இன்பத்தமிழ்!
ஔவையர் சுருக்கிய
ஔடதம்
வளைகளும் பதிகளும்
கொண்ட காப்பியம்!
குமரியும் வேங்கடமும்
முன்னர் எல்லை
விரியும் பாரிலே இன்று
தெரியுதில்லை
இன்பத்தமிழின் எல்லை !
சங்கம் செய்தது
சந்தம் செய்தது
சங்கீதம் செய்தது
அந்தம் இல்லாதது
எங்கள் தமிழ் !
காப்பியங்கள் கனிவுடன்
ஒப்பித்து
இலக்கியங்கள் இங்கிதமாய்
கற்பித்து
நெறி சொல்லி அருங்
குறிசொல்லிய செந்தமிழ்!
உரைநடை விரிவுடன்
இலகுவாய் கூறி
சிறுவர் இலக்கியமும்
செய்யுளில் கூறிய நற்றமிழ் !
பாரதி தமிழ் அடிதொழுதான்
அண்ணன்
கண்ணதாசன்
கவியால் தொழுதான் !
காப்பியர் கண்டிப்பு
வள்ளுவர் தண்டிப்பு
சேக்கிழார் சொல்லுப்பூ
சாத்தனார் முத்தாய்ப்பூ !
பூக்களை சொல்லிலே
கோர்த்த தமிழ் மாலை
பூக்களால் மணத்திடும்
நறுஞ்சோலை !
தமிழொரு தொடர்கதை
அழகான புதுக்கவிதை
மரபினை தழுவிய காவியம்
உயிரிசை தலும்பிடும் ஓவியம்!
-உமர் அலி முகம்மதிஸ்மாயில்