அதிகம் வாசித்தவை

Posted by : Unknown Sunday, March 16, 2014













தொடமுடியா இடத்தில்
தெரியாமல் தொடக்கி
கெடுபிடியா உடம்பில்
விரைந்து படரும்!

இரத்தத்தில் தோன்றி
வருத்தங்கள் காட்டும்
சத்தங்கள் இன்றி
நெருப்பினை மூட்டும்!

தீராத தலைவலி வாந்தியும்
வலிப்புடன் வரும்
கட்டி மூளையத்தொட்டால்!

விழுங்கிடக் கஷ்டம்
நீராகாரம் மட்டும்
வழுக்கிடும் ஒடுங்கிய
தொண்டைக் கட்டியினூடே!

பெருந்தீட்டு போகும்
தொடராய் ,நீ சோர்வாய் பலனாய்
கருப்பையில் கட்டி
நீ உணர்வாய்!

செரிமானம் குறையும்
பசிதாகம் பறந்து
ஒருபிடிச்சோற்றில்
முழு வயிறு நிறையும்
இரைப்பையில் கட்டி
இருந்திடும் போது!

எலும்பினில் கட்டி
உன்னை வைத்திடும் கட்டி
நடந்திட மாட்டாய்
நீ அடி வைத்து எட்டி!

தண்டுவடம் துவண்டு விடும்
வந்த இடம் வளைந்து விடும்!

தசையினில் தொட்டு
உன் அசைவினைக் கட்டும்!

நாக்கிலே வந்து சொல்
வாக்கினை கெடுக்கும்
ஆக்கிய சோற்றின்
சுவையினை மறைக்கும்!

சொக்கிலே வந்து உள்
தாடைக்கு பரவும்
மூக்கிலே முளைத்து
மூச்சையும் மறிக்கும்!

குரல் மாறிப்போகும்
உரல் போல ஆகும்
சுரம் ஓடித்தேயும்
குரல்வளையினில் படின்!

நுரையீரல் வந்து
இடைவிடா இருமலும்
விரைகின்ற மூச்சுடன்
குருதி சளியுடன் வரும்!

சிறுநீரில் இரத்தம்
அதன் பாதையில் கட்டி
சிறு நீர் சேர்ந்து அடிக்கடி
முடுக்குமே வந்து முட்டி!

மலச்சிக்கல் வந்து
உனைச்சிக்கலாக்கும்
மலம் நீராய் மாறி
உன் குடல்நோய் காட்டும்!

தோலிலே கட்டு
புண் மாறாததையிட்டு
தோலெல்லாம் திட்டு
தோலிலே சில பொட்டு!

ஈரலில் வந்தது
தீராமல் நின்றது
ஓரக் கண்ணின்
வெண்நிறம் மஞ்சளாய்
தோலையும் மாற்றிடும் !

பால் குடிமறந்த பிள்ளை
அவள் பால் கொடுப்பதுமில்லை
தடித்த திரவம் வடியும் சிவப்பாய்
பிள்ளை பால்குடிக்கும் இடத்தில்!

நிறை காட்டும் தராசு
உனைப்பார்த்து முறைக்கும்
உனக்கென்ன குறை
என்று வினா ஒன்று தொடுக்கும்!

களைப்பு உன்னிலே
களைகட்டும்
இளைப்பு உன்னிலே
கொடிகட்டும் !

உழைப்பு உனக்கினி
தூரமாகும்
சிரிப்பு தள்ளி நின்று
கை காட்டும்!

காய்ச்சல் அடிக்கடி
மாச்சலுக்கு நீ எடுபிடி
ஓய்ச்சல் ஒழிவின்றி
உழைத்திடும் இதயம்
இதனிலே இல்லை!

வயதெல்லை இல்லை
இது பெரும் தொல்லை
பால் எல்லை இல்லை
விதி வரை எல்லை!

நாட்பட்ட
குணங்குறி நீ அறி
பயம் அதை நீ எறி
நாடிடு மருந்து
தேடிடு விரைந்து!


                  -உமர் அலி முகம்மதிஸ்மாயில்


  • நாம் எல்லோரும் நமக்கும், ஏனையோருக்கும் புற்றுநோய் வராமல் இறைவனை இருகரம் ஏந்தி பிரார்த்திப்போம். 
  • வந்தவர்களுக்காய் அவை குணப்பட மனம் உருகி பிரார்த்திப்போம்! 
  • நாம் வாழும் சூழல், உண்ணும் உணவுகள், கதிரியக்கம், பழக்கவழக்கம் போன்ற விடயங்களில் எச்சரிக்கையாய் இருப்போம்!

Leave a Reply

என்னுள்ளத்து கதவை மெல்ல தட்டி அழைத்த எண்ணங்களுக்கு கற்பனை சொற்கள் கொண்டு வரிகள் கொடுத்த போது...

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © நிலாத்தூறல் - Date A Live - Powered by Blogger - Designed by Johanes Djogan -