அதிகம் வாசித்தவை

Posted by : Unknown Tuesday, March 11, 2014














தேர்தல் மேகம்
வான் பிளக்கும் கோசம்
ஊர்களெல்லாம்
கொடி பறக்கும்!

பேசப்பழகிடும்
பெரியோர்கள்
ஏசித்திரியும்
சிறியோர்கள்

மயிலாடுது
குதிரை பாய்ந்தோடுது
நாயொன்று வந்து
மரத்தை அன்னாந்து
பார்த்துக் குரைக்குது!

செருக்குப் பிடித்தமரம்
அருகிலே நிற்கும்
நாணலை பார்த்து
அருக்குக்காட்டி
நகைக்கிறது!

நாணல் சொல்கிறது
நானும் நாளைக்கு
விழுதுவிட்டு
நீயாவேன் என்று!

அன்று
வேர்கள் முக்கி
முனகி நீர் கொடுக்க
இலைகள் காய்ந்து கருகி
சூரியச்சோறாக்கி
வளர்ந்த மரம்
இன்று
பூவும் பிஞ்சும்
காயும் கனியுமாய்
கலகலக்கிறது!

மலர் பறிக்க ஒருகூட்டம்
கனி உண்ண ஒருகூட்டம்
மரம் தறிக்க ஒரு கூட்டம்
மல்லுக்கட்டுது

வேரிலே மருந்திரிக்காம்
வேர் தோண்டும் கூட்டமொன்று
தளிரிலே விருந்துண்டு
களித்திருக்கும் மறு கூட்டம்!

பட்டை உரித்து
கசாயம் காய்ச்சி
ஆயுளை கூட்டுகிறார்

வெட்டை வெளிதானே
வேலிகட்டி வளைத்திடவே
நினைக்கிறார் பலபேரு!

கிளை வெட்டி
நிலை செய்து
நிலையிலே சாய்ந்து நிற்கிறார்
நிலைதடுமாறி விழவும்
பார்க்கிறார்!

அடிமரம் ஆடவில்லை
நிலம் சாய்ந்து விடல!

மரம் அழிக்க
தவம் செய்தார்
தவம் கலைந்து
தலை சொறிந்தார்!

சில பறவைகள்
காலத்துக்கு காலம்
வந்து கொஞ்சிக்குலாவி
கூடுகட்டி
இனம்பெருக்கி செல்கின்றன!

காகம் மட்டும்
கரைந்து கொண்டு
வந்தவர் போனவரின்
எச்சில் இலைகளை
துப்பரவு செய்கிறது!

சிலவேளை
காகம் கத்துதென்று
கல்லெடுத்து எறிகின்றார்!

நச்சுப்பாம்பொன்று
பச்சை நிறத்திலே
மூச்சடக்கி நேரம்பார்த்து
ஒளித்திருக்கு!

அடியிலே கறையான்
வீடு கட்டிக்கட்டி
மீண்டும் மீண்டும்
சிதைக்கிறது

முடியிலே கழுகு
அடியிலே உலவும்
இரை கௌவ
காத்திருக்கு!

நரிகள்
மரநிழலில் கூடி
மாநாடு நடத்துகின்றன !

மாடுகள் நிழலில்
அசைபோடுகின்றன!

கழுதைகள் இன்னும்
சுற்றுவந்து
சுமைகளை
சுமந்து கொண்டே
இருக்கின்றன!

பச்சோந்தி
பச்சிலைக்குள்
மறைஞ்சிருக்கு !

கோழைகள்
அடிக்கடி
கிளைகளில்
தூக்குக்கயிறு மாட்டி
தாமாக மாய்ந்து
விடுகின்றனர்!

குயில்
விடுதலை கீதம் பாடிய
மரம்
இடியாய் சிலர்
முழங்கிய
சுரம் ...இன்னும் கேட்கிறது

யானைகள்
முதுகு சொறிய
சிலவேளை
மரத்திலே உரசுது !

ராசா
மரத்தை
நிறம் மாற்றப்
பார்க்கிறார்

கூஜா
தூக்குவதாய்
கைவைத்து
தூக்குகிறார்!

கருங்காலி
மரமன்றோ ?
இரும்பிலும்
கனமன்றோ ?

ஒற்றை மரத்துத்
தோப்பு இது
ஒருவரின் சொத்தல்ல
ஊராரின் சொத்து இது !

தனியுரிமை இங்கு இல்லை
உரிமைக்காரன் யாருமில்லை
யாவருக்கும் உரிமையுண்டு
ஒதுங்கி நிற்கத்தேவையில்ல!

             - உமர் அலி முகம்மதிஸ்மாயில்

Leave a Reply

என்னுள்ளத்து கதவை மெல்ல தட்டி அழைத்த எண்ணங்களுக்கு கற்பனை சொற்கள் கொண்டு வரிகள் கொடுத்த போது...

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © நிலாத்தூறல் - Date A Live - Powered by Blogger - Designed by Johanes Djogan -